நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் 21–ந் தேதி நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் வருகிற 21–ந் தேதி நடக்கிறது என்று நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் வருகிற 21–ந் தேதி நடக்கிறது என்று நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
குறைதீர்க்கும் முகாம்
நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் 2–வது சனிக்கிழமையன்று பொது வினியோக திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம், குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் தலைமையில் நடைபெறும்.
இந்த மாதம் 2–வது சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் 3–வது சனிக்கிழமையான வருகிற 21–ந் தேதி இந்த முகாம் நடக்கிறது. நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட வண்ணான்பச்சேரி கிராமத்திலும், பாளையங்கோட்டை தாலுகா கொங்கந்தான்பாறையிலும், சங்கரன்கோவில் தாலுகா களப்பாக்குளம் கிராமத்திலும், தென்காசி தாலுகா முத்துமாலைபுரத்திலும், செங்கோட்டை தாலுகா பிரானூரிலும் முகாம் நடக்கிறது.
வீரகேரளம்புதூர் தாலுகா
சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட விசுவநாதபேரி கிராமத்திலும், வீரகேரளம்புதூர் தாலுகா பரன்குன்றாபுரம் கிராமத்திலும், ஆலங்குளம் தாலுகா குறிப்பன்குளம் கிராமத்திலும், அம்பை தாலுகா வாகைகுளம் கிராமத்திலும், நாங்குநேரி தாலுகா சிங்கிகுளத்திலும், ராதாபுரம் தாலுகா பரமேசுவரபுரத்திலும், கடையநல்லூர் தாலுகா திருவேட்டநல்லூரிலும், திருவேங்கடம் தாலுகா சுந்தரரேசபுரம் கிராமத்திலும், மானூர் தாலுகா வடக்கு தாழையூத்திலும், சேரன்காதேவி தாலுகா பாப்பாகுடியிலும் முகாம் நடக்கிறது.
இந்த குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டு, ரேஷன் கடையில் வழங்கும் பொருட்கள் குறித்த குறைகள் இருந்தால் புகார் தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.