சப்பர பவனிக்கு போலீசார் தடைவிதித்ததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

கோவில் விழாவில் சப்பரபவனிக்கு போலீசார் தடை விதித்ததை கண்டித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-16 23:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

விக்கிரமசிங்கபுரம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்கள் ஊரில் கோவில் திருவிழா நடத்த அனுமதி மறுத்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால்துரை, வேல்கனி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பாபநாசம் பாபநாசசுவாமி கோவிலில் நாங்கள் ஆண்டு தோறும் 8-ம் திருவிழா நடத்தி வருகிறோம். இந்த விழாவில் வழக்கம் போல் சப்பரபவனி நடக்கும். அப்போது மேளதாளம், இசை வாத்தியங்கள் முழங்கப்படும். அப்படிதான் இந்த ஆண்டும் திருவிழா நடந்தது. இரவு 11 மணி ஆகிவிட்டதால் மேளதாளம் முழங்கக்கூடாது என்று கூறி போலீசார் சப்பர பவனிக்கு தடை செய்தனர். மேலும் ஒரு தனிநபர் இந்த வழியாக சப்பரம் செல்லக்கூடாது என்று கூறினார். அவருடைய பேச்சை கேட்டு எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். சப்பரம் செல்லக்கூடாது என்று கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் விக்கிரமசிங்கபுரத்தில் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட உள்ளோம் என்று கூறி உள்ளனர்.

பாளையங்கோட்டை செயின்ட் பால்ஸ்நகர் மக்கள் நல அபிவிருத்தி சங்கத்தினர் தங்கள் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது நடைபாதையை முள்வேலி அமைத்து தடுத்ததை உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நெல்லை டவுன் தையல்காரத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி மகாராணி அவருடைய உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது 11 மாத குழந்தையின் இறப்பிற்கு காரணமான தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

தமிழ் புலிகள் கட்சியினர், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியை சேர்ந்த சந்திரன் என்பவரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

அம்பை அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி வைராவிகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மணிமுத்தாறு பெருங்கால்வாயில் இருந்து முன்குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்