தானே ரெயில் நிலையத்தின் 165-வது ஆண்டு தொடக்க விழா பயணிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்

165-வது ஆண்டு தொடக்க விழாவில் பயணிகள் கேக் வெட்டிகொண்டாடினார்கள்.

Update: 2018-04-16 23:00 GMT
மும்பை,

தானே ரெயில் நிலையத்தின் 165-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இதனை பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள பிரதான ரெயில் நிலையங்களில் ஒன்றாக தானே ரெயில் நிலையம் திகழ்கிறது. கடந்த 1853-ம் ஆண்டு இந்த ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியாவின் முதல் பயணிகள் ரெயில் சேவை போரிபந்தர் (தற்போதைய மும்பை சி.எஸ்.எம்.டி.)- தானே இடையே தான் தொடங்கப்பட்டது.

தானே ரெயில் நிலையத்தில் மத்திய ரெயில்வேயின் மெயின் மற்றும் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரெயில்கள் மற்றும் நீண்டதூர ரெயில்களில் பயணிப்பதற்காக தினமும் 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள், 50-க்கும் மேற்பட்ட நீண்டதூர ரெயில்கள் தானே ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

இதனால் தானே ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். தானே ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து நேற்று முன்தினத்துடன் 164 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இதையடுத்து, தானே ரெயில் நிலையத்தின் 165-வது ஆண்டு தொடக்க விழாவை ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இதில் ராஜன் விச்சாரே எம்.பி. கலந்துகொண்டு ரெயில் வடிவ கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கினார். மேலும் பயணிகளும் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்