குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்

குடிநீர் வழங்க கோரி உடையவர்தீயனூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-16 22:45 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அம்பாபூர் ஊராட்சிக்கு உட்பட்டது உடையவர்தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மின்மாற்றி பழுதுகாரணமாக கடந்த ஒருவார காலமாக மின்வினியோகம் செய்யப்படவில்லை.

தொடர்ந்து நீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமலும், மின்சாரம் கிடைக்காமலும் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பகுதி கிராமமக்கள் காலிக்குடங் களுடன் குடிநீர் வழங்க கோரியும், மின்மாற்றியை சீரமைத்து மின்சாரம் வினியோகிக்க கோரியும் ஸ்ரீபுரந்தான்-அரியலூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார், தேளூர் மின்வாரிய உதவி மின்பொறியாளர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுது சரி செய்யப்படும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஸ்ரீபுரந்தான்-அரியலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்