அனைத்து துறைகளிலும் புதுவையை முதல் மாநிலமாக மாற்றி வருகிறோம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு

கல்வி, மருத்துவம், சுற்றுலா உள்பட அனைத்து துறைகளிலும் புதுவையை முதல்மாநிலமாக மாற்றி வருகிறோம் என்று நாராயணசாமி பேசினார்.

Update: 2018-04-16 22:45 GMT
காரைக்கால்,

புதுச்சேரி வக்பு வாரியம் சார்பில் காரைக்கால் பெரியப்பள்ளி வாசலில் நேற்று இரவு மீலாது நபி விழா நடைபெற்றது. விழாவிற்கு வக்புவாரிய அமைச்சர் ஷாஜகான் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அசனா, கீதா ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி அளவிலான தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற சிறுபான்மை முஸ்லிம் மாணவ, மாணவியர்களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி அரசு அனைத்து மத மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கி வருகிறது. வடமாநிலங்களில் மதத்தின் பெயரில் கலவரம் நடந்தாலும், புதுச்சேரி, காரைக்காலில் அமைதி நிலவுகிறது என்றால், நாங்கள் மத நல்லிணக்க ஆட்சியை தந்துகொண்டிருக்கிறோம். இஸ்லாமிய பெண்கள் கல்வி கற்கவும், வேலைவாய்ப்பு பெறவும், நாட்டின் சிறந்த நிர்வாகியாக வரவும், அனைத்து சலுகைகளையும் செய்து வருகிறோம்.

13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி மாநிலத்தை சட்ட ஒழுங்கு, கல்வி, மருத்துவம், சுற்றுலா அனைத்திலும் முதன்மையான மாநிலமாக மாற்றிவருகிறோம்.

மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி யார் எத்தகைய பிரச்சினைகளை தந்தாலும், காங்கிரஸ் அரசு மக்களுக்கான நல்ல அரசாகதான் திகழும். மேலும், மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு யாசகம் எதுவும் தரவேண்டாம். முறையாக தரவேண்டிய நிதியை தந்தாலே போதுமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்