மேடவாக்கத்தில் மீன் வியாபாரி ஓட, ஓட விரட்டி படுகொலை, 8 பேர் கைது

மேடவாக்கத்தில் மீன் வியாபாரி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-16 23:45 GMT
ஆலந்தூா்,

சென்னையை அடுத்த மேடவாக்கம் காந்தி நகர் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து மேடவாக்கம் கூட்ரோட்டில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள சிறிய சந்து வழியாக மேடவாக்கம் கூட்ரோட்டிற்கு வந்தபோது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.

சிறிது நேரத்தில் அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் உயிர் பிழைப்பதற்காக அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று சீனிவாசனின் கை, கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியது.

இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். ஆனாலும் வெறி அடங்காத அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சீனிவாசன் கழுத்தை அறுத்தனர். அவர் இறந்ததை அறிந்ததும் கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தந்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் மேடவாக்கம் காந்திநகரை சேர்ந்த சதீஷ் (20) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

மீன் வியாபாரம் செய்யும் சீனிவாசன் அதுதொடர்பான வேலையில் என்னையும், எனது நண்பர்களையும் ஈடுபடுத்துவார். வேலை செய்தாலும் சரியாக கூலி தர மாட்டார். எங்கள் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு அடித்து உதைப்பார். எங்களை மிரட்டினார்.

இதனால் கடந்த வாரம் எங்களுக்கும், சீனிவாசனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் எங்களை துன்புறுத்தி வந்ததால் அவரை கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சதீஷை கைது செய்த போலீசார் அவரது நண்பர்களான அஜீத் (21), பரத் (21), விஜய் என்ற கபாலி (22), ராஜ் (21), விக்கி (22), தினேஷ் (21), நவீன் (21) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்