யார் விலகி சென்றாலும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை; குமாரசாமி

யார் விலகி சென்றாலும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என குமாரசாமி கூறினார்.

Update: 2018-04-16 21:15 GMT
மைசூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக எச்.டி.கோட்டை, சாமுண்டீஸ்வரி தொகுதிகளில் கடந்த 3 நாட்களாக குமாரசாமி முகாமிட்டுள்ளார். அவர் நேற்று காலை சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவேகவுடாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது குமாரசாமி மக்கள் மத்தியில் பேசியதாவது:-

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு 113 இடங்கள் போதுமானது. அந்த இடங்களை ஜனதா தளம்(எஸ்) கட்சி கைப்பற்ற வேண்டும். அதுவே எனது குறிக்கோள். அதற்கு மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் 7 பேர் இணைந்துள்ளனர். அவர்கள் அல்ல யார் கட்சியை விட்டு விலகி சென்றாலும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர்கள் 7 பேரையும், கடந்த ஓராண்டுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்.

சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஓரிரு நாளில் பிரசாரம் செய்தாலே வெற்றி பெற்று விடுவேன் என்று சித்தராமையா கூறி வருகிறார். அவர் எத்தனை நாட்கள் பிரசாரம் செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனெனில் சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சாமுண்டீஸ்வரி மக்கள் எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றாலும் பரவாயில்லை.

சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் கூட்டம் நடத்தினால் அதில் மக்கள் கலந்துகொள்ளுங்கள். அப்போது அவருடைய நடவடிக்கைகளை நன்கு கவனியுங்கள். என்னிடம் பணம் எண்ணும் எந்திரம் இல்லை. அவரிடம் (சித்தராமையா) உள்ளதா? என்பதை கவனியுங்கள். பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று சித்தராமையா எண்ணுகிறார். அந்த எண்ணம் ஒருபோதும் பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்