கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர், பட்டா வழங்கக்கோரி திரண்டு வந்த பொதுமக்கள்

குடிநீர், பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.;

Update: 2018-04-16 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இந்திரவள்ளி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் சாணார்பட்டி ஒன்றியம் கொசப்பட்டி மக்கள் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கொசவபட்டியில் 3 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கிறோம். குடிநீர் வசதிக்காக 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. அதில் 2 ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே, புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சி ஒட்டுப்பட்டி கிராம மக்கள், காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுபற்றி அவர் கள் கூறுகையில், ஒட்டுப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீருக் காக சிரமப்பட்டு வருகிறோம், என்றனர்.

அதேபோல் தோட்டனூத்து ஆதிதிராவிடர் காலனி மக்களும், காலிக்குடங்களுடன் வந்து குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டி கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி வருகிறோம். எனவே, எங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

இதற்கிடையே திண்டுக்கல் முனிசிபல் காலனி மக்கள் பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து, ஒருசிலர் மட்டும் மனு கொடுக்க உள்ளே செல்லும்படி கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்ததால், ஒருசிலர் சென்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், மாநகராட்சி 26-வது வார்டு முனிசிபல்காலனியில் 5 தலைமுறைகளாக வசிக்கிறோம். ரேஷன்கார்டு, ஆதார் கார்டு என அனைத்தும் அந்த முகவரியில் பெற்றுள்ளோம். இந்தநிலையில் வீடுகளை இடிக்கப்போவதாகவும், 3 மாதத்துக்குள் குடியிருப்புகளை காலிசெய்யும்படியும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏராளமான குடும்பத்தினர் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. துப்புரவு பணியை மட்டுமே நம்பி வாழ்கிறோம். எனவே, நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

அய்யலூர் பேரூராட்சி நாகப்பபிள்ளையூர், எஸ்.கே.நகர் மக்கள் கொடுத்த மனுவில், நாகப்பபிள்ளையூருக்கு சாலை வசதி இல்லை. சாலை அமைப்பதற்காக பட்டா நிலத்தை தானமாக கொடுத்தும், இதுவரை சாலை அமைக்கவில்லை. அதேபோல் எஸ்.கே.நகரில் மின்சாரம், குடிநீர் இல்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.

மேலும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்