காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோடு பெருமாள் மலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோடு பெருமாள் மலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதால் தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சியினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்தைபோல் காவிரி மீட்பு போராட்டத்திலும் பொதுமக்கள் களமிறங்கி உள்ளனர். ஈரோட்டை அடுத்த பெருமாள் மலை பகுதியில் பொதுமக்கள் சார்பில் நேற்று மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருமாள் மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, பெருமாள் மலையில் உள்ள பவானி ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும், ‘காவிரி எங்கள் பிறப்புரிமை, தமிழர்களின் உரிமையை பறிக்காதே’ என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழர்களின் உரிமையை மீட்பதற்காக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறோம். தமிழக அரசும், மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்”, என்றனர்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சித்தோட்டை சேர்ந்த தர்மலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.