முதுமலையில் மண்சாலையை கடந்து சென்ற சிறுத்தைப்புலி

முதுமலையில் மண்சாலையை சிறுத்தைப்புலி கடந்து சென்றது. இதனை வாகன சவாரியின் போது சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Update: 2018-04-16 22:15 GMT
மசினகுடி,

தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களில் சிறந்ததாக முதுமலை புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் தற்போது சிறுத்தைப்புலி மற்றும் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த புலிகள் காப்பகத்தில் 70-க்கும் மேற்பட்ட புலிகளும் 80-க்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகளும் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைப்புலி மற்றும் புலிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் முதுமலைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளும் அவற்றை அடிக்கடி கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று காலை தெப்பக்காட்டில் இருந்து வனத்துறை வாகனத்தில் சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் மண் சாலையோரம் உள்ள ஒரு மரத்தின் மீது சிறுத்தைப்புலி ஒன்று படுத்து கொண்டிருப்பதை கண்டனர். சிறுத்தைப்புலியை பார்த்தவுடன் வாகனம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வாகனத்தில் உட்கார்ந்தவாறே சுற்றுலா பயணிகள் சிறுத்தைப்புலியை பார்த்து ரசித்தனர். சில சுற்றுலா பயணிகள் தங்களுடைய செல்போனில் அதை பதிவு செய்தனர்.

பின்னர் சிறுத்தைப்புலி மெதுவாக மரத்தில் இருந்து கீழே இறங்கியது. பின்னர் மரத்தின் அடியில் உள்ள புற்களில் மறைந்தவாறு அமர்ந்து சுற்றுலா பயணிகளை கண் காணித்தது.

சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்த அந்த சிறுத்தைப்புலி பின்னர் மெதுவாக வாகனத்தின் பின்புறம் நடந்து வந்தது. அதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து சிறுத்தைப்புலி மண்சாலையை கடந்து மெதுவாக புதருக்குள் சென்று மறைந்தது.

இந்த நிகழ்வினை சுற்றுலா பயணிகள் பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளனர். அது பார்ப்போரை வியப்படைய செய்து உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதி பசுமை இன்றி காணப்படுவதால் சிறுத்தைப்புலி எளிதில் காண முடிந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்