சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள்

சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2018-04-16 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி, பன்னிமரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தட்டனேரி, பன்னிமரம் ஆகிய 2 கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மலைவேடர் இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த 1995-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் 260 பேருக்கு மலைவேடர் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதிச்சான்றிதழ் வழங்குவது குறித்து விசாரணையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படாததால் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் சேர்க்க முடியாத நிலைமை உள்ளது. இதனால் எங்களது குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தாலும், மருத்துவ படிப்பில் சேர சாதி சான்றிதழ் அவசியமாகும். சாதி சான்றிதழ் இல்லாததால் வேலைவாய்ப்பு கிடைப்பதிலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே, பழங்குடியின மக்களான எங்கள் குழந்தைகளுக்கு மலைவேடர் சாதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்