பெண்களிடம் நூதன முறையில் நகை பறிப்பு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவையில் வயதான பெண்களிடம் நூதன முறையில் நகைகளை பறித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2018-04-16 22:30 GMT
கோவை,

கோவையில் நடந்து செல்லும் வயதான பெண்களிடம் போலீஸ் போல நடித்து தங்க நகைகளை நூதனமுறையில் மோசடி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அவர்களை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண் டனர்.

இந்த நிலையில் கடந்த 31.1.2018 அன்று மதியம் 12.15 மணிக்கு சலீவன் வீதியில் நடந்து சென்ற ரமேஷ்குமார் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை சில மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த யாசர் அலி(வயது 47), தகி அலி(43), பைரோஸ் அலி(36), சாகித் அலி(28), சபீர் அலி(32), அஸ்லாம் பிஜாத் ஜாபரி(60), ராக்கேஷ் ரவீந்தர் சர்மா(27) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 41½ பவுன் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கைதான 7 பேரில் பைரோஸ் அலி, சாகித்அலி, சபீர் அலி ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதை ஏற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பைரோஸ் அலி, சாகித் அலி, சபீர் அலி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் அவர்கள் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்