ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தல்

ராஜபாளையத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2018-04-16 21:45 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் கோதண்டராமர் கோவில் அருகே இரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் தடுப்புகளை அமைக்கவும், பொதுப்பணித்துறை அனுமதியுடன் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்கு வரத்து போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பழைய பஸ் நிலையம் முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர். தொடர்ந்து கண்காணிக்க தவறியதை பயன் படுத்தி தற்போது நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. நடைபாதை ஆக்கிரமிப்புகளால் சாதாரண நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். தற்போது திருவிழா காலம் என்பதால் நெரிசல் மிக அதிகமாக உள்ளது.

போக்குவரத்து போலீசார் அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும், நகருக்குள் வரும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் போன்றவை அதிக வேகத்துடனும், அதிக இரைச்சல் கொண்ட காற்று ஒலிப்பான்களை ஒலிப்பதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அச்சத்தில் விபத்தில் சிக்கும் நிலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து காந்தி கலை மன்றம் வரை ஒருவழிப்பாதையாகும். ஆனால் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் இதை கவனத்தில் கொள்ளாமல் போக்குவரத்து போலீசாரின் எச்சரிக்கையை மீறி சாலையில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் தடுப்புகள் அமைத்து ஒரு வழிப்பாதையாக ஆட்டோக்கள், லோடு ஏற்றி வரும் ஆட்டோக்களை வேறு பாதையில் திருப்பி விட்டாலும் விதியை மீறி குறுக்கு வழி பாதையாக ரெயில்வே பீடர் சாலை வழியாக சென்று பூபால்பட்டி தெரு, அம்பல புளிபஜார் போன்ற நெரிசல் அதிகம் கொண்ட பாதையில் அதிக வேகத்துடன் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பள்ளிக்குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டியிருக்கிறது.

போக்குவரத்து போலீசார் இதை கவனத்தில் கொண்டு போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தி நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்