ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீக்குளிக்க முயன்றதாக அண்ணன், தம்பியை கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்த மஞ்சுளா (வயது 54) தனது மகன்கள் பிரகாஷ் (38), கார்த்திக் (36), மருமகள்கள் ருக்மணி (28), செல்வி (28) மற்றும் பேரன் விக்னேஷ் (4) ஆகியோருடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார்.
திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து, கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். எதிர்பாராதவிதமாக நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடிச்சென்று தீக்குளிக்க முயன்ற 6 பேரையும் தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் அவர்கள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினார்கள். மண்எண்ணெயை உடலில் ஊற்றியதில் மஞ்சுளா மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் மஞ்சுளா முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர். பின்னர் 6 பேரையும் போலீசார்வேனில் ஏற்றி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ‘மஞ்சுளாவின் குடும்பத்துக்கு சொந்தமான பூர்வீக சொத்து ஈரோடு பிருந்தா வீதியில் உள்ளது. தற்போது அந்த சொத்தின் மதிப்பு ரூ.80 கோடி ஆகும். இந்த சொத்தை மஞ்சுளாவின் உறவினர் ஒருவர் அனுபவித்து வருகிறார். மஞ்சுளாவின் குடும்பத்தினருக்கு அந்த சொத்தை அனுபவிக்க கொடுக்கவில்லை.
அதனால் மஞ்சுளாவின் குடும்பத்தினர் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் போலீசார் மற்றும் அதிகாரிகளிடமும் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மஞ்சுளாவின் குடும்பத்தினர் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தபோது தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்’ என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பிரகாஷ், கார்த்திக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.