மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பேச்சு

மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் வளர்மதி பேசினார்.

Update: 2018-04-16 22:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சின்னையா தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குனர் கவுரி முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் காளிதாசன் வரவேற்றார். வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மு.வளர்மதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயக்குமாரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

இதில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் மு.வளர்மதி பேசியதாவது:-

இக்கல்லூரியில் படிப்பு மட்டுமின்றி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களும் உயர்கல்வி பெறுவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி முக்கியம். மாணவர்கள் பட்டப்படிப்புடன் தங்கள் படிப்பை நிறுத்தி விடாமல் பட்ட மேற்படிப்புகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். சமுதாயம் பயன்பெறும் வகையில் ஆய்வு கட்டுரைகளை வழங்க வேண்டும்.

அரசு கல்லூரியில் நாம் படிப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். எதிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை பெற வேண்டும். மாணவர்கள் பெற்றோரையும், கல்வி கற்று தந்த ஆசிரியர்களையும் மறக்கக் கூடாது. கல்லூரி படிப்பை முடித்து வெளியே செல்லும் மாணவர்கள் நல்ல வேலைக்கு சென்று தங்கள் படித்த கல்லூரிக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இதையடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள், கோப்பைகளை வழங்கி பாராட்டினர். முடிவில் தமிழ்த்துறைத் தலைவர் வே.நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்