சிறுமி கொலை விவகாரம்: நீதி கேட்டு சிறுவர், சிறுமிகள் ஊர்வலம்
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு கம்பத்தில் சிறுவர், சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
கம்பம்,
ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா போலீசார் உட்பட 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாள். இதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று தேனி மாவட்டம் கம்பத்தில் ஆசிபா கொலைக்கு நீதி கேட்டும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கேட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சிறுவர், சிறுமிகளின் ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாஹின், நகரத்தலைவர் ஜெய்லானி, நகரச்செயலாளர் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் தாத்தப்பன்குளத்தில் தொடங்கிய ஊர்வலம் கம்பம்மெட்டு சாலை, முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வழியாக புதுபள்ளிவாசலை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்டு சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி வழங்கு, குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு வந்தனர்.
கம்பம் புதுபள்ளிவாசல் அருகே ஊர்வலமாக வந்த சிறுவர், சிறுமிகளை உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் கட்சியினருக்கு எச்சரிக்கை செய்தனர். பின்னர் சிறுவர், சிறுமிகளை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் கம்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி சிறுவர்களை வைத்து ஊர்வலம் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சிக்கந்தர் ஜெய்லானி (32), ஜாபர்சாதிக் (42), சாதிக் அலி (33), முகமது ஷாகின் (36), முருகன் (31), நிஜாம்தீன் (39) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமையில் கட்சியினர் முகைதீன் பள்ளிவாசலில் இருந்து கம்பம் மெட்டுச்சாலை வழியாக தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது கம்பம் வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலத்தில் வந்த 33 பேரை கைது செய்தனர்.
கம்பத்தில் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் லெனின் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் நாகராஜ், மகளிர் அணியை சேர்ந்த விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆசிபா மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.