பழனி அருகே பரிதாபம்: தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை பலி

பழனி அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2018-04-15 22:15 GMT
பழனி,

பழனியை அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 30). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு வயதில் தினேஷ் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை வீட்டில் தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் ஒரு பகுதியில் திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தினேஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.

தொட்டிக்குள் குழந்தை விழுந்த சத்தம் கேட்டு சிவகாமி ஓடி வந்தார். தண்ணீரில் மூழ்கி கிடந்த தினேஷை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தான். இது குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்