மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.27 கோடியில் கூடுதல் கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.27 கோடியில் கூடுதல் கட்டிடங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

Update: 2018-04-15 22:15 GMT
மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் ரூ.27 கோடி செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை மதுரை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் பெண்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை அமைந்துள்ள இடத்தில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அதன்பின்பு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினர். அதைத் தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் புதிய கட்டிடம் பற்றி பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மொபட் வண்டிகள் உள்பட 1,540 பேருக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, மணிகண்டன், ராஜலட்சுமி, பாஸ்கரன், எம்.பி.க்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், மாணிக்கம் மற்றும் புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், சாலைமுத்து, வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடம் 4 மாடி கொண்டதாக கட்டப்பட உள்ளது. 10 ஆயிரத்து 904 சதுரமீட்டர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 114 அறைகள் கட்டப்படுகிறது. இங்கு கலெக்டர் அலுவலகம், மாவட்ட வழங்கல், செய்தி-மக்கள் தொடர்பு, தனிதாசில்தார் (விமான நிலைய விரிவாக்கம்-1) தனி தாசில்தார் (விமான நிலைய விரிவாக்கம்-2), மாவட்ட தணிக்கை துறை, சார்நிலைக் கருவூலம், உதவிஆணையர் (ஆயத்தீர்வை) மாவட்ட கருவூலம், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்(கணக்கு, விவசாயம், நிலம், சத்துணவு, சிறுசேமிப்பு), கள்ளர் சீரமைப்பு துறை இணைஇயக்குனர், தனி தாசில்தார் (அரசு கேபிள் டி.வி.), தனி துணை கலெக்டர் (நில உச்ச வரம்பு), தனித் துணை கலெக்டர் (முத்திரைதாள்), கிளைமேலாளர்(எல்காட்), தனிதாசில்தார்(அகதிகள்முகாம்), பேரூராட்சிகள் உதவி இயக்குனர், மாவட்ட மேலாளர்(தாட்கோ), தனி துணை கலெக்டர் (வருவாய்நீதிமன்றம்), ஒழுங்கு நடவடிக்ை- ககுழு ஆணையாளர், தனி தாசில்தார்(தேர்தல்), மாவட்ட தகவலியல் மையம், மண்டல கருவூல இயக்குனர், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) ஆகிய அலுவலகங்கள் அமைய உள்ளன. 

மேலும் செய்திகள்