சித்திரை மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சித்திரை மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-04-15 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் சாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் தர்மபுரி அரிகரநாதசாமி கோவில் தெருவில் உள்ள தாசஆஞ்சநேயர் சாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மபுரியை அடுத்த வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி சாமிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மன்றோ ஆஞ்சநேயர்

தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் சாமி கோவிலில் சித்திரை மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் சோகத்தூர் ஆஞ்சநேயர் கோவில், குப்புசெட்டிப்பட்டி வீரஆஞ்சநேயசாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில், வர்ணதீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் நடைபெற்ற சித்திரை மாத அமாவாசை சிறப்பு பூஜைகளில் திரளானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்