பெருகவாழ்ந்தான் அருகே ஆற்றில் சரக்கு வேன் கவிழ்ந்தது; 6 பேர் படுகாயம்

பெருகவாழ்ந்தான் அருகே ஆற்றில் சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-04-15 23:00 GMT
பெருகவாழ்ந்தான்,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி-முத்துப்பேட்டை வரை சுமார் 36 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் பூமிக்கும் அடியில் கேபிள் பதிக்கும் பணி 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தலையாமங்கலம் கிராமத்தில் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் 6 தொழிலாளர்கள் குறிச்சி கிராமத்தில் இருந்து கேபிள் மற்றும் பொருட்களை ஒரு சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு பாலையூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சரக்கு வேனை கோட்டூர் அருகே உள்ள வேதப்புரத்தை சேர்ந்த அருண் (வயது 26) ஓட்டி சென்றுள்ளார். ஒரத்தூர் பாலம் பொற்காளியம்மன் கோவில் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாமணியாற்றில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் சரக்கு வேனில் சென்ற விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த செல்வம் (26), ராஜேந்திரன் (58), முருகன் (46), சுப்பராயன் (55), கோபாலகண்ணன் (27) மற்றும் டிரைவர் அருண் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து முருகன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்