நாகையில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

நாகையில் மீன்பிடி தடை காலம் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி ரூ.15 ஆயிரம் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-04-15 23:00 GMT
நாகப்பட்டினம்,

கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் நேற்று தொடங்கியது. இந்த மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவற்றில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறியவகை படகுகள் மட்டும் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

நிவாரணம்

இந்த மீன்பிடி தடை காலம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஏற்கனவே மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-

45 நாட்களாக இருந்த மீன்பிடி தடை காலம் கடந்த ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால் நிவாரணத்தொகையை ரூ.15 ஆயிரமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்