பாம்பனில் தடையை மீறி மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பயணம்

பாம்பனில் தடையை மறி மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-04-15 22:30 GMT
ராமேசுவரம்,

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் பகுதி விளங்குகிறது.அது போல் தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கடலில் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம், ரெயில் பாலத்தையும் பார்த்து ரசித்து செல்கின்றனர். இவ்வாறு ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடி படகில் கடலில் பயணம் செய்ய அரசு தடைவிதித்து உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை மீனவர்கள் மீன்பிடி படகில் ஏற்றி செல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து நேற்று 2 மீன் பிடி பைபர் படகில் சுற்றுலா பயணிகள் 8 பேர் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.வடக்கு கடற்கரையில் இருந்து பாம்பன் ரெயில்வே தூக்குப் பாலத்தை கடந்து தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் வரை கடலுக்குள் அழைத்து செல்லப்பட்டு மீண்டும் பாம்பன் கடற்கரையிலேயே வந்திறங்கினர். இந்த 2 படகிலும் லைப் ஜாக்கெட் அணியாமல் குழந்தையுடன் பெண்கள், ஆண்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

அரசின் தடை உத்தரவை மீறி ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் சுற்றுலா பயணிகளை கடலுக்குள் சென்று ஆபத்தான பயணம்செய்வது பாம்பன் பகுதியில் சர்வ சாதரணமாக நடை பெற்று வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளை ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் ஏற்றி செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சுற்றுலா பயணிகள் மீன் பிடி படகில் பயணம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடலோர போலீசாரும், மீன் துறை அதிகாரிகளும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்