பிளஸ்-2 தேர்வு தாள் புறக்கணிப்பு- உள்ளிருப்பு போராட்டம் தொடரும்

பிளஸ்-2 தேர்வு தாள் புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்று திருச்சியில் நடந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-04-15 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

1-6-2009 முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பு சரி செய்யப்படாமலேயே எட்டாவது ஊதிய குழு நடை முறைக்கு வந்து விட்டது. இது மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதால் ஊதியம் திருத்தப்பட வேண்டும் எனவும், முதுகலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்குமான ஊதிய விகிதம் இடைவெளி அதிகரிக்க வேண்டியும், மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெறும் மாத ஊதியம் ரூ.18 ஆயிரத்து 150-க்கு இணையாக தர கோரியும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் தேர்வு தாள் புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.

தேர்வு மையங்களில் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும். பிளஸ்-1 தேர்வுவிடைத்தாள் திருத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற இருப்பதால் நல்ல காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதியுடன் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ரூ.5 கோடி செலவில் மிகப்பெரிய விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்வது. தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களின் வாழ்விடத்தில் இருந்து 15 முதல் 20 கி.மீட்டர் தூரத்திற்குள் பணியமர்த்தும்படி கேட்டுக்கொள்வது, வருகிற கல்வியாண்டில் மொழிப்பாடங்களுக்கு ஒற்றை வினாத்தாள் கொண்டு வரவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்