ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை குடிபோதையில் மகன் வெறிச்செயல்

திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-15 23:00 GMT
திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஜெயா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 61), ரெயில்வே பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அமுதா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். இவர்களது மகன் ராஜ்குமார் (வயது 37).

கடந்த சில ஆண்டுகளாக ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. மேலும் தந்தை மனோகரனிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப் படுகிறது.

மேலும் எனது தாய் அமுதா சாவுக்கு நீ தான் காரணம், வேறு பெண்ணுடன் நீ தொடர்பு வைத்து இருந்ததால் தான் தாய் இறந்து விட்டார் என கூறி மனோகரனிடம் ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை மது அருந்தி விட்டு, போதையில் மனோகரனிடம் ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் வெறித்தனமாக இரும்பு கம்பியால் மனோகரனின் தலையில் அடித்து, கத்தியால் உடலில் ஆங்காங்கே சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மனோகரன் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்