மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 8 பேர் படுகாயம்
மேகமலை பகுதியில் மந்திபாறை என்னுமிடத்தில் வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
சின்னமனூர்,
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 36). இவர், தனது உறவினர் மற்றும் நண்பர்கள் 26 பேருடன் சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு ஒரு வேனில் நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். இதில் 6 குழந்தைகள், 16 பெண்கள் அடங்குவர். மேகமலை பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து விட்டு நேற்று மாலை ஊருக்கு திரும்பினர். வேனை, திருமுருகன் ஒட்டினார். மேகமலை மலைப்பாதையில் மந்திபாறை என்னுமிடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் வேன் கண்ணாடி நொறுக்கியது. வேனில் பயணம் செய்த கிருஷ்ணவேணி (58), ராஜேஸ்வரி (67), மீனாட்சி (69), செல்வி (42), தனலட்சுமி (60), செண்பகவல்லி (17), முத்துகிருஷ்ணன் (39) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் 6 குழந்தைகளும் காயமின்றி தப்பினர். வேனில் பயணம் செய்த சிலருக்கு லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிக்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மலைப்பாதையில் தடுப்புசுவர் இல்லையென்றால், பள்ளத்தில் வேன் உருண்டு விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.