உல்லாஸ்நகரில் 7 நாட்டு துப்பாக்கிகளுடன் காய்கறி வியாபாரி கைது
உல்லாஸ்நகரில் 7 நாட்டு துப்பாக்கிகளுடன் காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில் 7 நாட்டு துப்பாக்கிகளுடன் காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
ரகசிய தகவல்
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் சாகட் ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் துப்பாக்கிகளுடன் வருவதாக தானே குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ரெயில் நிலையம் அருகே சாக்குப்பையுடன் வாலிபர் ஒருவர் வருவதை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த சாக்குப்பையை திறந்து பார்த்தனர்.
7 துப்பாக்கிகள்
அந்த சாக்குப்பைக்குள் 7 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் தானே கல்வாவை சேர்ந்த அனுஜ்குமார் (வயது23) என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.70 ஆயிரத்து 700 என போலீசார் தெரிவித்தனர்.
அந்த துப்பாக்கிகளை யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.