சமூக வலைத்தளத்தில் பெண்களை குறிவைத்து பணமோசடி நைஜீரியர்கள் உள்பட 3 பேர் கைது

சமூக வலைத்தளத்தில் பெண்களை குறிவைத்து பணமோசடி செய்து வந்த நைஜீரியாவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-14 22:00 GMT
மும்பை,

சமூக வலைத்தளத்தில் பெண்களை குறிவைத்து பணமோசடி செய்து வந்த நைஜீரியாவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் அறிமுகம்

மும்பை கார் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டு பேஸ்புக்கில் அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் கெல்வின் என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். இந்த நிலையில் ரிச்சர்ட் கெல்வின் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்தார்.

பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி ஒரு வங்கி கணக்கை கொடுத்து அதில் போடும்படி ரிச்சர்ட் கெல்வின் கூறியுள்ளார். அந்த பெண்ணும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை கொடுத்து உள்ளார்.

3 பேர் கைது

இந்த நிலையில், ரிச்சர்ட் கெல்வினை அந்த பெண்ணால் மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்ட பெண் சம்பவம் குறித்து கார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அந்த பெண் பணம் செலுத்திய வங்கி கணக்கு எண் நாலச்சோப்ராவை சேர்ந்த சோகைப் குரோஷி என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, நாலச்சோப்ராவில் தங்கி இருக்கும் நைஜீரியர்களான பாஸ்கல் தும்பே (வயது21), சாண்டி மாசே (22) ஆகியோருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெண்களிடம் பேஸ்புக் மூலம் பழகி திருமண ஆசை காட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, 7 சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்