சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா மாவட்டங்களில் வெவ்வேறு விபத்துகளில் சிறுவர்கள் உள்பட 5 பேர் சாவு

சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் சிறுவர்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.;

Update: 2018-04-14 21:45 GMT
சிக்கமகளூரு, 

சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் சிறுவர்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.

கார் மீது லாரி மோதியது

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எரேபள்ளி கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்து குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் காருக்குள் இறந்து கிடந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து இருந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவரிடம் விசாரணை

இந்த விபத்து பற்றி அறிந்த ஐமங்களா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பல்லாரியை சேர்ந்த அக்மல் பாஷா(வயது 34), சபான் ஹபீஸ்(40), என்பதும், மற்ற 3 பேரும் அவரது உறவினர்கள் என்பதும் தெரிந்தது. இவர்கள் பல்லாரியில் இருந்து துமகூருவுக்கு சென்றதும், அப்போது கார் விபத்தில் சிக்கி 2 பேர் இறந்ததும், 3 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஐமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் சாவு

இதேப்போல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சோமவார்பேட்டை கிராமத்தின் அருகே நேற்று சாலையோரம் ஒரு கார் நின்றது. அப்போது அந்த சாலையில் தமிழ்நாட்டில் இருந்து மக்கா சோள பயிர்களை ஏற்றிக் கொண்டு தமிழக பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, சாலையோரம் நின்ற கார் மீது மோதி கவிழ்ந்தது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது. இந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 3 பேர் இறந்தனர். ஒரு பெண் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பற்றி அறிந்த சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகாவை சேர்ந்த சங்கேத்(12), லட்சுமிகாந்த்(10), சித்து என்பது தெரிந்தது. படுகாயம் அடைந்த பெண்ணின் பெயர் பிரீத்தி. இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு காரில் சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் உத்தர கன்னடாவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியதும், 3 பேர் இறந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சாலையின் கவிழ்ந்து கிடந்த லாரி கிரேன் உதவியுடன் தூக்கப்பட்டது. அதன்பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சரியானது. இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா மாவட்டங்களில் நேற்று நடந்த வெவ்வேறு விபத்துகளில் சிறுவர்கள் உள்பட 5 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்