பெங்களூருவில் இளம்பெண் மிரட்டி கற்பழிப்பு பெரியப்பாவின் மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூருவில், இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக தலைமறைவான அவருடைய பெரியப்பாவின் மகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில், இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக தலைமறைவான அவருடைய பெரியப்பாவின் மகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கற்பழிப்பு
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலை சேர்ந்தவர் மகேஷ் (வயது 23). இவர் பெங்களூருவில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கி இருந்தார். இவருடைய சித்தப்பாவுக்கு, 28 வயது நிரம்பிய மகள் இருக்கிறார். இவரால் சரியாக பேச முடியாது. இந்த நிலையில், கடந்த 1½ ஆண்டுகளாக சித்தப்பாவின் மகளான தனது அக்காவை, மகேஷ் கற்பழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதனால், அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து வெளியில் கூறவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மகேஷ், பாதிக்கப்பட்ட தனது அக்காவின், தோழிக்கும் பாலியல் தொல்லை கொடுத்து அவரையும் மிரட்டியுள்ளார். சம்பவத்தன்று, இரவில் வீட்டில் தூங்கிய அக்காவுக்கு, மகேஷ் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து மகேசை பிடித்து அவருடைய சித்தப்பா, சித்தி ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, அவர் களிடம் இருந்து தப்பித்த மகேஷ் வீட்டில் இருந்து வெளியே ஓடி தலைமறைவாகிவிட்டார்.
போலீஸ் வலைவீச்சு
இதற்கிடையே, சம்பவம் குறித்து அறிந்த மகேசின் தந்தை, தனது சகோதரரை தொடர்பு கொண்டு, மகேஷ் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டாம். மகேசால் பாதிக்கப்பட்டவரை அவனுக்கே திருமணம் செய்து வைக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இருவரும், அக்காள்-தம்பி உறவுமுறை என்பதால் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய், பாரதிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளம்பெண்ணின் பெரியப்பாவின் மகனான மகேசை வலைவீசி தேடிவருகிறார்கள்.