கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-04-14 22:30 GMT
நெல்லை,

சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பஞ்சாங்கம் படித்தல்

இதைத்தொடர்ந்து சுவாமி நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் தமிழ் புத்தாண்டையொட்டி, புதிய வருடத்துக்கான பஞ்சாங்கத்தை கோவில் தீட்சிதர் வாசித்தார். அப்போது இந்த வருடத்துக்கான மழை, தானிய விவரங்களும், கோவிலில் நடைபெறுகின்ற திருவிழாக்கள் குறித்தும் பஞ்சாங்கம் படித்தார். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவில், கல்யாண விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தன.

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

ஆஞ்சநேயருக்கு அலங்காரம்

நெல்லை கெட்வெல் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு விசு கனி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வகை பழங்களாலும் அலங்கார பூஜை நடந்தது. தன்வந்தி மகாவிஷ்ணு, கனக மகாலட்சுமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நெல்லை டவுன் புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் சித்திரை விசு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சீவலப்பேரி துர்காம்பிகை கோவிலில் காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சீவலப்பேரி அழகர் கோவிலில் சித்திரை விசுவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.

சுடலைமாட சுவாமி கோவில்

சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் கொடை விழா நடந்தது. காலை 6 மணிக்கு சுடலைமாட சுவாமி, பேச்சி, பிரம்மசக்தி, முண்டசுவாமி, புதியவன் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி மயானம் சென்று வருதலும், பரன் ஏறுதலும் நடந்தது. பின்னர் ஏராளமான ஆடுகள், பன்றி பலியிடப்பட்டது.

கொடை விழாவில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நெல்லை சந்திப்பில் இருந்து சீவலப்பேரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கீழப்பாவூர்

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று காலையில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணிக்கு கனி காணுதல், 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 9 மணிக்கு கனி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து பூஜைக்கான பழ வகைகளை கொண்டு வந்து சமர்ப்பித்து, தமிழ் புத்தாண்டான நேற்று காலை அதனை பிரசாதமாக பெற்றுச் சென்றனர்.

பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை முருகன் கோவிலில் கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் தவிடு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கீழப்பாவூர் 2-ம் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

மேலும் செய்திகள்