நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.

Update: 2018-04-14 22:45 GMT
நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசியதாவது:-

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி 24-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. கும்பாபிஷேக விழாவின்போது பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், போக்குவரத்து சீராக இயங்கவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் போதிய அளவில் தீயணைப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அன்றைய தினம் தடையில்லா மின்சார வினியோகம் செய்ய வேண்டும். மாநகராட்சி சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய சுகாதாரம், தற்காலிக கழிப்பறை மற்றும் நான்கு ரதவீதிகளில் தேவையான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்வதுடன் குப்பை மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு அதிகளவில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும். நெல்லை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். கோவிலை சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை விழா நாட்களில் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார் (பொது), (முத்து இளங்கோவன் (வளர்ச்சி பிரிவு), ராமசுப்பிரமணியன் (நிலம்), இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, போலீஸ் உதவி கமிஷனர் மாரிமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் போலீஸ், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்