நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வீடு இடிந்து குழந்தை பலி

கன்னியாகுமரி அருகே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Update: 2018-04-14 23:00 GMT
நெல்லை,

இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் நெல்லை- தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

களக்காடு தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுதவிர தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 33 கன அடி தண்ணீரும், சேர்வலாறு அணைக்கு 120.39 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் மணிமுத்தாறு அணைக்கு 63 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:-

பாபநாசம்- 23.05, சேர்வலாறு- 19.68, மணிமுத்தாறு- 80.35, கடனாநதி- 58.50, ராமநதி- 50.00, கருப்பாநதி- 44.62, குண்டாறு- 21.38, வடக்கு பச்சையாறு- 5.00, நம்பியாறு- 11.84, கொடுமுடியாறு- 4.00, அடவிநயினார்- 48.50.

இதுதவிர நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

அம்பை- 22.3, மணிமுத்தாறு- 20, கொடுமுடியாறு- 15, சங்கரன்கோவில்- 13.3, பாளையங்கோட்டை- 11.3, அடவிநயினார்- 8, நெல்லை- 7.4, குண்டாறு- 7, சேரன்மாதேவி-7, ராதாபுரம்- 6.2, சிவகிரி- 5, பாபநாசம்- 1, செங்கோட்டை- 1.

நெல்லை மாவட்டத்தில் அம்பையில் அதிகபட்சமாக 22.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி நகர் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பகுதியில் அதிகபட்சமாக 107 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக கீழ அரசடியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் -14, குலசேகரன்பட்டினம்-13, காயல்பட்டினம் - 12, விளாத்திகுளம் -107, காடல்குடி- 6, வைப்பாறு- 28, கோவில்பட்டி- 41, கயத்தாறு - 25, கடம்பூர்- 20, கழுகுமலை- 36, ஓட்டப்பிடாரம்- 22, கீழஅரசடி- 3, எட்டயபுரம் - 39, சாத்தான்குளம்- 5, ஸ்ரீவைகுண்டம்- 12, தூத்துக்குடி- 26.8

நெல்லை தச்சநல்லுர் ஊருடையான் குடியிருப்பு பகுதியில் உள்ள மேலதெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி தேவி. இவர்களுக்கு அருணா அர்ஷிகா என்ற 4 மாத பெண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். குழந்தை அருணா அர்ஷிகா தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தாள்.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. பலத்த மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. கணவன்- மனைவி இருவரும் திடுக்கிட்டு விழித்தனர்.

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது. மேற்கூரையில் உள்ள கம்பில்தான் தொட்டி கட்டி மகளை தூங்க வைத்து இருந்தனர். மேற்கூரை இடிந்ததால் தொட்டிலில் தூங்கிய குழந்தை தரையில் விழுந்து கதறி அழுதது. கணவன்- மனைவி இருவரும் பதறி அடித்துக் கொண்டு மகளை தூக்கிக்கொண்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக இறந்தது. மகளின் உடலை பார்த்து கணவன்- மனைவி இருவரும் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 மாத குழந்தை இறந்த சம்பவம் தச்சநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி அருகே மாலத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர பகுதிகளில் காற்று பலமாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல் உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

மேலும் செய்திகள்