தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் ஒரு இடத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். த.ம.மு.க.வினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.;

Update: 2018-04-14 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்க கோரிய மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது. இது போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் நேற்று 62-வது நாளாக போராட்டம் நடத்தினர். இந்த கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராம மக்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

அதன்படி பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, முருகேசன் நகர், மாதவநகர், 3-ம் மைல், சிலோன் காலனி ஆகிய கிராம மக்கள் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் பாத்திமா நகர் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இவர்களது போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் மேலும் ஒரு இடத்தில் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை நேற்று தொடங்கி உள்ளனர். அதாவது, தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான நேதாஜி நகர், தேவர் நகர், விஸ்வபுரம், அய்யப்பநகர், அன்னை இந்திரா நகர், யோகீசுவரர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலையில் தேவர் நகரில் திரண்டனர். அங்கு பொது இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த நெல்லை நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள், நெல்லை மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முத்துபாண்டி தலைமையில் பண்டாரம்பட்டி பகுதி மக்களை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவிக்க சென்றனர்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பாக நின்று, ஆலையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அங்கு வந்த போலீசார், கோஷங்கள் எழுப்புவதற்கு அனுமதி மறுத்தனர். அதன்பிறகு பண்டாரம்பட்டி கிராமத்துக்கு சென்றனர். அங்கு போராட்டம் நடத்தி வந்த மக்களை சந்தித்து பேசினர். அதன்பிறகு அ.குமரெட்டியபுரம் கிராமத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில போலீசார் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து மீளவிட்டான் பகுதி-2 கிராம நிர்வாக அதிகாரி பிரேம்சுதாகர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன், மாநில செயலாளர் உச்சிமகாளி, மத்தியகுழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட தலைவர் அமர்நாத், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், ஜாய்சன், மாரி, சுதாகர், கதிர், சந்தானம், பிருந்தா, ரமேஷ், கார்த்திக் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சிலர் மீது போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்