அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சமூக நீதி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நடந்த சமூக நீதி நாள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.;

Update: 2018-04-14 22:45 GMT
திருவாரூர்,

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கிராம சுயாட்சி இயக்க திட்டத்தின் கீழ் சமூக நீதி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறபட்டது. மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கீழவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை அடைந்தது. அங்கு நடந்த சமூக நீதி நாள் விழிப்புணர்வு கூட்டத்தில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்க திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு கியாஸ் இணைப்புகள், மின் இணைப்பு இல்லாத குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு, எல்.இ.டி. மின் விளக்குகள், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு, கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற அனைத்து மக்கள் நலப்பணிகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் கிராம சுயாட்சி இயக்கத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெறுவார்கள்.இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, செயற்பொறியாளர் செல்வராஜ், தாசில்தார் ராஜன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்