காதல் திருமணம் மூலம் பிறந்ததால் காப்பகத்தில் உள்ள குழந்தையை 15 வயது தாயிடம் ஒப்படைக்க வேண்டும், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

காதல் திருமணம் மூலம் பிறந்ததால் காப்பகத்தில் உள்ள குழந்தையை 15 வயதான அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-04-14 22:45 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரும், 15 வயது சிறுமியும் காதலித்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கர்ப்பமடைந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே அவர்களை கண்டுபிடித்த பெற்றோர் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு பிறந்த குழந்தையால் தங்கள் குடும்பத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று நினைத்த சிறுமியின் பெற்றோர், பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த குழந்தைக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி காப்பகத்தினரிடம் கொடுத்தனர்.

இதனையடுத்து அந்த குழந்தை தத்து கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக காப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே வாலிபரும், சிறுமியும் மீண்டும் வீட்டைவிட்டு ஓடினர். அவர்களை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி இருவரின் பெற்றோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரித்தனர்.

இதற்கிடையே குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கடந்த மாதம் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி மீட்கப்பட்டார்.

குழந்தையை காப்பகத்தில் இருந்து மீட்டு மனைவியிடம்(சிறுமி) ஒப்படைக்க வேண்டும் என்று வாலிபர் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தையை தாங்களே வளர்த்துக்கொள்வதாக வாலிபரின் பெற்றோரும் கோர்ட்டில் உறுதியளித்தனர்.

இதுதொடர்பாக வாலிபர், சிறுமி, குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிபதிகள், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்கும்போது சிறுமியின் பெற்றோர் தரப்பில் எழுதி கொடுக்கப்பட்ட ஒப்பந்தப்பத்திரம் ரத்து செய்யப்படுகிறது. 10 மாத குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும்.

குழந்தை முறையாக பரா மரிக்கப்படுகிறதா என்று சமூகநல அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்