அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினர் மோதல் பஸ் கண்ணாடி உடைப்பு - போலீசார் குவிப்பு

பொம்மிடி அருகே அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-04-14 23:00 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ளது மங்களம்கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகள், கொடிகள் கட்டும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் உங்கள் பகுதியில் மட்டும் கொடிகளை கட்டுங்கள், எங்கள் பகுதியில் கட்டாதீர்கள் எனக்கூறியுள்ளனர்.

இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மங்களம்கொட்டாய் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி கட்சியின் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் தலைமையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம், தகராறில் ஈடுபட்ட மற்றொரு தரப்பினரின் பகுதி வழியாக சென்றது. பின்னர் மீண்டும் அதே வழியில் ஊர்வலம் திரும்பி வந்தது.

அப்போது ஊர்வலமாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன், மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள், உங்கள் பகுதியில் மட்டும் விழாவை நடத்தி கொள்ளுங்கள், இங்கு வேண்டாம் எனக்கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் தலைமையில் மங்களம் கொட்டாய் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே 2 அரசு பஸ்களின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனால் பொம்மிடி பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொம்மிடி, மங்களம் கொட்டாய் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

பின்னர் மதியம் 2 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொம்மிடி ரெயில் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த மறியலால் தர்மபுரி -பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அரூர் உதவி கலெக்டர் பத்மாவதி, தாசில்தார் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியவர்கள் மீதும், பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் இரு தரப்பினரும் தகராறில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்