வால்பாறையில் சாலை - குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டெருமைகளால் பீதி

வால்பாறையில் சாலைகளிலும், எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடும் காட்டெருமைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2018-04-14 21:45 GMT
வால்பாறை,

வால்பாறை பகுதியில் அதிகளவில் காட்டுயானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், புலிகள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளைச் சுற்றியும்,சாலை ஓரங்களிலும், காபித் தோட்டங்களிலும் காட்டெருமைகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு தொழிலாளர்கள்,தேயிலைத் தோட்டங்களுக்கும், காபித் தோட்டங்களுக்கும் பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.

வால்பாறையிலிருந்து சோலையார் அணைக்கு செல்லும் சாலையில் பழைய வால்பாறை எஸ்டேட் அருகே சாலையில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டு நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அங்கு நின்றிருந்த காட்டெருமைகள் சிறிது நேரத்தில் அருகிலிருந்த பழையவால்பாறை எஸ்டேட் ஆஸ்பத்திரி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தன. இதனால் பயந்துபோன பணியாளர்கள் வீடுகளுக்குள் ஓடினார்கள். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

தற்போது வனவிலங்குகள் வீடுகளுக்கே வருகின்ற நிலை உள்ளது. குறிப்பாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது எஸ்டேட் தொழிலாளர்கள், பொதுமக்களை பீதி அடையவைத்துள்ளது. ஆகவே வனத்துறையினர் கண்காணிப்பு பணிமேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்