தண்டவாளத்தில் குண்டு வைத்து ரெயிலை கவிழ்க்க சதி: துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்

பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் குண்டு வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Update: 2018-04-14 23:00 GMT
பொள்ளாச்சி,

கடந்த 11-ந்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு கோவைக்கு பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரெயில்வே கேட் அருகில் வந்த போது, ரெயிலின் 4-வது இணைப்பு பெட்டியின் கீழ் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு கோவைக்கு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பழனி ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருவதால், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரெயிலை கவிழ்க்க சதி நடந்து உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் குண்டு வைத்த மர்ம நபர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் தண்டவாளத்தில் உட்காருவது போன்று உள்ளது. ஆனால் அருகில் கருவேல மரம் உள்ளதால், அவர்கள் யார்? என்று தெளிவாக தெரியவில்லை. மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அதிலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் எந்த அமைப்புகளும் இதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. இதன் காரணமாக குண்டு வைத்த மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

திருச்சி ரெயில்வே சூப்பிரண்டு ஹனி வனிதா உத்தரவின் பேரில் மதுரை துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர உள்ளூர் போலீசாரும் 7 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் தண்டவாளத்தில் குண்டு வைத்தது யார்? என்பது தெரியவில்லை. உயர் அதிகாரிகள் பொள்ளாச்சியில் தங்கி விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். விரைவில் குண்டு வைத்த நபர்களை கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்