சிவகங்கையில் 100 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது

மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சிவகங்கையில் 100 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

Update: 2018-04-13 21:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதற்கிடையில் கடந்த 2 தினங்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகங்கையில் 100 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. காந்தி வீதி, அரண்மனை வாசல் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மழையால் சிவகங்கையை சேர்ந்த மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சிவகங்கையில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதேபோன்று காளையார்கோவில், மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- சிவகங்கை 100.5, மானாமதுரை 21, திருப்புவனம் 10.4, தேவகோட்டை 7.2, காரைக்குடி 6.4, திருப்பத்தூர் 1.3. 

மேலும் செய்திகள்