எச்.ராஜாவிற்கு எதிர்ப்பு: விடுதலை சிறுத்தைகள்-பா.ஜ.க.வினர் இடையே மோதல், சாலை மறியல்

பொன்னமராவதியில் எச்.ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டியதால் மோதல் உருவானது. இதனால் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு, திருமாவளவன் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-14 23:00 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரில் நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம், ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது பா.ஜ.க. சார்பில் பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திறப்பதற்காக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்.ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தை நோக்கி ஆவேசமாக சென்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா தலைமையிலான அக்கட்சியினர், தங்களை தடுத்து நிறுத்திய போலீசாரை கண்டித்தும், கருப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்ய கோரியும் பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் திருமாவளவனின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையிலான போலீசார் உருவபொம்மையை எரிக்க முயன்ற பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்தினர். இதனால் எச்.ராஜாவிற்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட எச்.ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் எச்.ராஜா தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பேசி விட்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பொன்னமராவதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்