பாலவாக்கத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 80 பவுன் நகைகள் கொள்ளை
ஓய்வுபெற்ற பேராசிரியர் வீட்டில் 80 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பாலவாக்கம் பல்கலை நகர் முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 60). இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய 2-வது மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் தங்கராஜ், வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் திருச்சியில் உள்ள உறவினர்களுக்கு பத்திரிகை வைக்க சென்று விட்டார்.
நேற்று காலை அவரது வீட்டு வேலைக்கார பெண், வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், தங்கராஜூக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.
80 பவுன் கொள்ளை
இதையடுத்து திருச்சியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த தங்கராஜ், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. அறையில் உள்ள பீரோவில் சோதனை செய்தபோது, அதில் வைத்து இருந்து 80 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
தங்கராஜ், குடும்பத்துடன் திருச்சி சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இதுபற்றி நீலாங்கரை போலீசில் தங்கராஜ் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆராய்ந்து வருகின்றனர்.