சாமிதோப்பு தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்

சாமிதோப்பு தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-04-13 22:48 GMT
தென்தாமரைகுளம்,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியின் வடக்கு வாசலில், அய்யா தவம் இருந்த போது அவரது தவத்தை கலைக்க கலிநீச மன்னன் முடிவு செய்தான். இதற்காக மன்னன் தனது ஆட்களை அனுப்பி அய்யாவை கைது செய்து கொண்டு வர உத்தரவிட்டான்.

இதை அறிந்த அய்யா சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு சென்று அங்கு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலிடம் ஆலோசனை பெற்று மீண்டும் சாமிதோப்புக்கு திரும்பி வந்து தவத்தை தொடர்ந்தார் என்று அகிலத்திரட்டு கூறுகிறது.

இந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு முத்துக்குடை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் தொடர்ந்து ஊர்வலம் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஊர்வலத்தை தலைமைப்பதி நிர்வாகி பையன் ராஜா தொடங்கி வைத்தார்.

குருமார்கள் பால் பையன், பையன் காமராஜ், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் கரும்பாட்டூர், விஜயநகரி, சந்தையடி, வெள்ளையன் தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், குண்டல் வழியாக முட்டப்பதியை சென்றடைந்தது.

அங்கு திருப்பாற்கடலில் பதமிட்ட பக்தர்கள் மதியம் முட்டப்பதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கொட்டாரம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தனர்.

ஊர்வலத்தில் தலைப்பாகை அணிந்து காவி கொடி பிடித்தப்படி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்