மாதவரத்தில் லாரியை திருடி விற்க முயன்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது
லாரியை திருடி விற்க முயன்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 33). இவர், சொந்தமாக லாரிகளை வைத்து, மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பசீர் ரகுமான்(48) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்த லாரிகளை மாதவரத்தில் உள்ள அரவிந்தின் நண்பருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி டிரைவர் பசீர் ரகுமான், மாதவரத்தில் லாரியை நிறுத்தி விட்டு சாவியை அரவிந்திடம் கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது. ஆனால் கடந்த 3-ந்தேதி அந்த லாரி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த், இதுபற்றி மாதவரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் லாரி டிரைவர் பசீர்ரகுமான் தனது நண்பரான கொளத்தூர் லட்சுமிபுரம் திலகர் தெருவைச் சேர்ந்த சம்பத்குமார்(45) என்பவருடன் சேர்ந்து, அந்த லாரியை திருடியது தெரிந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் திருவேற்காட்டில் உள்ள பழுது நீக்கும் நிலையத்தில் அந்த லாரியின் முன்பக்கம் கலரை மாற்றி, அதை விற்க அவர்கள் முயன்றதும் தெரியவந்தது. அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.