பொறையாறு அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி

பொறையாறு அருகே பள்ளிக்கு சென்ற தனது சகோதரிகளுக்கு ‘டாட்டா‘ காட்ட வந்த 2 வயது பெண் குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி பலியானாள். இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு.

Update: 2018-04-13 22:32 GMT
பொறையாறு,

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி நாகப்பன் நகரை சேர்ந்த கார்த்திகேசன்-ஜெயந்தி தம்பதியினரின் மகள்கள் மனிஷா(வயது 10), லெட்ஷனியா(4), சுபிக்‌ஷா(2). இவர் களில் மனிஷா தரங்கம்பாடி அருகே சாத்தங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பும், லெட்ஷனியா யூ.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளிக்கு, அந்த பள்ளியின் ஒப்பந்த அடிப்படையிலான வேனில் சென்று வருகின்றனர். இந்த வேன் தில்லையாடி பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமுருகன்(30) என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த வேனுக்கு அவரே டிரைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக மனிஷா, லெட்ஷனியா ஆகிய 2 பேரையும் பெற்றோர் வேனில் ஏற்றி விட்டனர். அப்போது வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்த குழந்தை சுபிக்‌ஷா, திடீரென பள்ளிக்கு செல்லும் தனது சகோதரிகளுக்கு ‘டாட்டா’ காட்டுவதற்காக வேனின் முன்பக்கம் வந்ததாக தெரிகிறது.

இதை கவனிக்காத டிரைவர் திருமுருகன், வேனை இயக்கி உள்ளார். அப்போது முன்பகுதியில் நின்று கொண்டிருந்த சுபிக்‌ஷா மீது வேன் மோதியது. இதில் சாலையில் விழுந்த சுபிக்‌ஷா தலை மீது வேனின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குழந்தை சுபிக்‌ஷா, பெற்றோரின் கண் முன்னே துடி, துடித்து இறந்தாள்.

தங்களது கண் முன்னே தங்கள் மகள் பலியானதை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வ குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான சுபிக்‌ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் திருமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்