மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.3 ஆயிரம் வரை இருக்கும் அதிகாரி தகவல்
மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.3 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
மும்பை,
மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் டிக்கெட் கட்டணம் ரூ.3 ஆயிரம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புல்லட் ரெயில்
மும்பை-ஆமதாபாத் இடையே ஜப்பான் நாட்டின் உதவியோடு அதிவேக புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தேசிய அதிவேக ரெயில்வே கழக நிர்வாக இயக்குனர் அச்சால் காரே நிருபர்களிடம் கூறியதாவது:-
மும்பை-ஆமதாபாத் இடையேயான புல்லட் ரெயில்களில் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.250 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் ரூ.3 ஆயிரம் வரையும் இருக்கும். ஒரு முதல் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டு அதற்கான கட்டணம் மட்டும் ரூ.3 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் இதன் மூலம் மிகக் குறைந்த செலவில் அதிவேகமாக பயணிக்கலாம்.
ரூ.250 கட்டணம்
விமான நிலையங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் டிக்கெட் பரிசோதனைக்கு ஆகும் நேரத்தையும் சேர்த்து கணக்கிட்டால் புல்லட் ரெயில்களில் விமான பயணத்தை விட குறைவான நேரமே செலவாகும்.
தானே முதல் பாந்திரா-குர்லா வளாகத்துக்கு தனியார் வாகனங்களில் தற்போது ரூ.650 செலவாகிறது. ஆனால் புல்லட் ரெயில்களில் வெறும் ரூ.250 தான் தேவைப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2023-ல் பயன்பாட்டுக்கு வரும்
இதற்கிடையே பீகார் மாநிலம் பாட்னாவில் கிழக்கு சென்ட்டிரல் ரெயில்வே சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று பேசிய ரெயில்வே வாரிய தலைவர் ஆர்.சி.லோகானி, புல்லட் ரெயில்களுக்கான பணிகள் திட்டமிட்டபடி நிறைவுபெற்று, வருகிற 2023-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.