கணவன்-மனைவி சண்டையை விலக்க சென்றபோது மாடியில் இருந்து தள்ளி விடப்பட்ட வாலிபர் பரிதாப சாவு
கணவன் - மனைவி சண்டையை தடுக்க சென்ற வாலிபர் வீட்டின் மாடியில் இருந்து தள்ளி விடப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.;
மும்பை,
கணவன் - மனைவி சண்டையை தடுக்க சென்ற வாலிபர் வீட்டின் மாடியில் இருந்து தள்ளி விடப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வாடகைக்கு இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கணவன்-மனைவி சண்டை
மும்பை மலாடு மேற்கு, மால்வாணி பகுதியை சேர்ந்தவர் ஹசினா (வயது45). இவர் தனது 3 மகன்களுடன் வசித்து வந்தார். இவரது வீட்டின் மேல் தளத்தில் சுல்தான் (34) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மதியம் 1 மணியளவில் சுல்தானுக்கும், அவரது மனைவி ரேஷ்மானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுல்தான் மனைவியை அடித்தார். சத்தம்கேட்டு ஹசினாவின் 3-வது மகன் அல்தாப் (24) மேல் தளத்திற்கு சென்றார். அவர் மனைவியை அடித்த சுல்தானை சமாதானம் செய்ய முயன்றார்.
வாலிபர் சாவு
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுல்தான், அல்தாப்பை பிடித்து தள்ளினார். அப்போது நிலை தடுமாறி அல்தாப் வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுல்தானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.