பல்லாரி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து டாக்டர் குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி சாவு
பல்லாரி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்திற்கு உள்ளானதில் டாக்டர் குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது.
பல்லாரி,
பல்லாரி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விபத்திற்கு உள்ளானதில் டாக்டர் குடும்பத்தினர் 5 பேர் உடல் நசுங்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆண் குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
5 பேர் நசுங்கி சாவு
பல்லாரி மாவட்டம் குருகோடு அருகே சோமசமுத்திரா, பாக்கியாநகர் சிருகுப்பா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த கார், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்றொரு குழந்தை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது.
இதுபற்றி அறிந்ததும் குருகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
டாக்டர்கள்
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பீதர் மாவட்டம் பால்கியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 32), அவரது மனைவி அர்ச்சனா(27), இவர்களது 10 மாத பெண் குழந்தை லட்சுமி, சந்தோஷ்குமாரின் பெற்றோர் சித்தராமப்பா(63), லீலாவதி(60) ஆகியோர் என்பது தெரியவந்தது. சந்தோஷ்குமாரின் மற்றொரு ஆண் குழந்தையான தனுஷ் (2) படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. மேலும் சந்தோஷ்குமாரும், அர்ச்சனாவும் டாக்டர்கள் ஆவார்கள். அவர் தனது குடும்பத்தினருடன் பால்கியில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
காரை சந்தோஷ்குமார் தான் ஓட்டியதும், அவர் அதிவேகமாக ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து குருகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியானதும், விபத்தில் தாய்-தந்தை உள்ளிட்டோரை இழந்து 2 வயது ஆண் குழந்தை அனாதையான சம்பவமும் பல்லாரியில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.