காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சார்பில் தலா 2 தொகுதிகளில் போட்டியிட தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சார்பில் தலா 2 தொகுதிகளில் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-04-13 22:00 GMT
பெங்களூரு, 

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சார்பில் தலா 2 தொகுதிகளில் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் நேற்று சங்க அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

25 லட்சம் தமிழர்கள்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் 25 லட்சம் தமிழர்கள் இருப்பதாக அரசு அறிவித்து உள்ளது. ஆனாலும் சட்டசபையில் தமிழர்களுக்காக குரல் கொடுக்க ஒரு தமிழர் கூட எம்.எல்.ஏ.வாக இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் தமிழர்கள் போட்டியிட காங்கிரஸ், பா.ஜனதா போன்ற தேசிய கட்சிகள் வாய்ப்பு அளிக்கவில்லை.

பெங்களூருவை பொறுத்தவரையில் 14 தொகுதிகளில் தமிழர்களே அதிகளவில் உள்ளனர். வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு தமிழர்களின் ஓட்டு வங்கி இருக்கிறது. அப்படி இருந்தும் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் இருக்கும் சூழ்நிலை தொடர்ந்து வருகிறது.

தலா 2 தொகுதிகள்

அதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 2 தொகுதிகளையும், பா.ஜனதா கட்சி சார்பில் 2 தொகுதிகளையும் தமிழர்களுக்காக ஒதுக்க வேண்டும். இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநில தலைவர் பரமேஸ்வர், முதல்-மந்திரி சித்தராமையாவிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

அதுபோன்று, பா.ஜனதா சார்பில் தலா 2 தொகுதிகளை ஒதுக்கும்படி அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் எடியூரப்பாவிடம் வலியுறுத்தியுள்ளோம். அந்த கட்சிகளின் தலைவர்கள், இந்த முறை தமிழர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும்

அதே நேரத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் தமிழர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அந்த கட்சி சார்பில் கோலார் தங்கவயலில் தமிழர் போட்டியிட ‘சீட்‘ வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி ஒதுக்கவும் வலியுறுத்துவோம். தமிழர்கள் வேட்பாளர்களாக இல்லாத தொகுதிகளில் யார் போட்டியிட்டாலும், அந்த வேட்பாளர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளார்களா? என்பதை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு தமிழர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்ச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.

கர்நாடகத்தில் தமிழர்களின் பிரச்சினை தீர்க்க, தமிழர்கள் எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும். சட்டசபையில் தமிழர்களின் பிரச்சினையை எழுப்பினால் தான், அதற்கு தீர்வுகாண முடியும். அதனால் கர்நாடக சட்டசபையில் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் நோக்கமாகும்.

கர்நாடக அரசின் முடிவுக்கு ஆதரவு

தேசிய கட்சிகள் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை எனில், சுயேச்சையாக போட்டியிடும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களது வெற்றிக்காகவும் தமிழ்ச்சங்கம் பாடுபடும். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஒரு அறிக்கை தயார் செய்து வெளியிட முடிவு எடுத்துள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழ்ச்சங்கம் ஆதரவு அளிக்கும். அதே நேரத்தில் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அரசிடம் தமிழ்ச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழ்ச்சங்க செயலாளர் ராமசுப்பிரமணியம், பொருளாளர் பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

எஸ்.எஸ்.பிரகாசம் கோரிக்கை

இதேப் போல் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் கட்சி மேலிடத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் அம்பிகா சோனியை சந்தித்த எஸ்.எஸ்.பிரகாசம், வருகிற தேர்தலில் 5 தமிழர்களுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்