தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து தேவேகவுடாவுடன் சந்திரசேகரராவ் ஆலோசனை
தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுடன் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுடன் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேவேகவுடாவுடன் சந்திப்பு
நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு(2019) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய அளவில் பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக 3-வது அணியை அமைப்பது குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மற்றும் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் ஏற்கனவே நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கான அச்சாரத்தை அவர்கள் இருவரும் போட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரசேகரராவ் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள இல்லத்தில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அக்கட்சியின் மாநில தலைவரும், தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமியும் உடன் இருந்தார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்பு
பா.ஜனதாவுக்கு எதிராக மிக தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். சந்திரசேகரராவ் கட்சி எம்.பி.க்கள் சிலரும் இதில் பங்கேற்றனர். அவர்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் 3-வது அணியை அமைப்பது குறித்து அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
மாநில கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பலமான அணியை அமைக்க வேண்டியது அவசியம் என்பது குறித்து சந்திரசேகரராவ் எடுத்துக் கூறினார். மேலும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தெலுங்கு பேசும் பகுதிகளில் தமது கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு சந்திரசேகரராவிடம் தேவேகவுடா கோரிக்கை விடுத்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
மாற்றாக ஒரு அணி
இந்த சந்திப்புக்கு பின் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘பா.ஜனதா, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் மாற்று அணி அமைப்பது குறித்து சந்திரசேகரராவ் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இது ஒரு சாதாரண அணி கிடையாது. ஏழைகள், விவசாயிகள் உள்ள அணி. நாட்டில் கடந்த 70 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் எதையும் செய்யவில்லை. அதனால் அந்த கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணி தேவைப்படுகிறது. 3-வது அணியோ அல்லது 4-வது அணியோ எந்த அணி அமைந்தாலும், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியை அகற்ற வேண்டும். நாட்டில் 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்’ என்றார்.
சந்திரசேகரராவ் பேட்டி
அதைத்தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவேகவுடா கூறியது போல் காங்கிரஸ், பா.ஜனதாவிடம் இருந்து மக்கள் விடுபட்டு வெளியே வர வேண்டும். ஏழைகள், விவசாயிகள், பெண்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள். அதை நாங்கள் உருவாக்கும் அணி செய்யும். தெலுங்கு தேசம், கம்யூனிஸ்டு உள்பட எந்த கட்சிகள் வேண்டுமானாலும் எங்கள் அணியில் சேரலாம். அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எங்களின் மிகப்பெரிய திட்டத்தை அறிவிப்போம்.
இதுபற்றி தேவேகவுடாவுடன் ஆலோசனை நடத்தினேன். காவிரி நீருக்காக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே எதற்காக தகராறு ஏற்பட வேண்டும்?. இந்த பிரச்சினையை 70 ஆண்டுகளாக தீர்க்காமல் அப்படியே வைத்திருப்பது ஏன்?. இந்த தேர்தலில் கர்நாடக மக்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும்“.
இவ்வாறு அவர் கூறினார்.