பழனியில், தங்கும் விடுதியில் வியாபாரியின் மனைவி-மகன்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பழனியில், தங்கும் விடுதியில் கடன் பிரச்சினை காரணமாக வியாபாரியின் மனைவி-மகன்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
பழனி,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ரோட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (39). இவர்களுடைய மகன்கள் சத்யன் (20), சஞ்சய் (19). சத்யன் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படிக்கிறார். சஞ்சய் பாலக்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறான்.
இந்த நிலையில் வியாபாரத்துக்காக பாலகிருஷ்ணன் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது. இதனால் பாலகிருஷ்ணன், முருகப்பெருமானிடம் தனது குறைகளை கூறி வேண்டிக் கொள்வதற்காக குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மதியம் பழனிக்கு வந்தார். பின்னர் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி நிலையத்தில் அவர்கள் அறை எடுத்து தங்கினர்.
நேற்று காலையில் மலைக்கோவிலுக்கு பாலகிருஷ்ணன் சாமி கும்பிட சென்றார். அவருடைய மனைவி, மகன்கள் கோவிலுக்கு வரவில்லை என்று கூறி அறையில் தங்கினர். பின்னர் கோவிலில் இருந்து பாலகிருஷ்ணன் விடுதிக்கு திரும்பினார். பின்னர் அறையின் கதவை தட்டிய போது, அறை கதவை அவருடைய மனைவி திறந்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். மகன்களும் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே விடுதி ஊழியர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர்கள் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவர் கடன் பிரச்சினையால் அவதியடைவதை பார்த்து மனமுடைந்த செல்வி, மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.